Tuesday, September 1, 2009

பொம்மை (கற்பனை)


வழக்கமாக சிறுவர்கள் பொம்மைக்காக சண்டையிட்டுக்கொள்வர்கள். இங்கே வேறு விதமாக நடந்துகொள்ளும் சிறுவர்களைக் கற்பனை செய்து பார்க்கலாம்.
------------------------------------------
நான் காலைச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, பரபரப்பு இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது எனது பையனுக்கும், அவனது தம்பிக்கும் பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. நான் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி என்ன பேசிக் கொண்டிருந்தார்கள்?

அண்ணன், " நான் நேற்று வாங்கி வந்த பொம்மை நன்றாக இருக்கிறது. அதில் வரும் டைனோசார் சப்தங்கள் எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. இந்தப் பொம்மையை எவ்வளவு உயரம் தூக்கிப்போட்டாலும் உடையவே உடையாது. இந்தப் பொம்மையை எங்கே போட்டாலும் அது தானே நகர்ந்து அதன் இடத்திற்கு வந்துவிடும். தண்ணீருக்குள் அழுத்தி வைத்திருந்தாலும் நன்றாகவே இருக்குமாம். ஆனால் நான் அது போலச் செய்யப் போவது இல்லை. அப்படிச் செய்வது எனக்குப் பிடிக்காது. தம்பி, இந்தப் பொம்மையை நீயே வைத்துக்கொள்."

தம்பி, " நீ சொன்னதற்கு ரொம்ப சந்தோசம். ஆனால் இந்தப் பொம்மையை நீயே வைத்துக்கொள்."

அண்ணன், " இல்லை இதை நீதான் வைத்தக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நான் அழுதுவிடுவேன்."

தம்பி," அது எப்படி அண்ணா முடியும்? அது நீ ஆசையாக வாங்கிய பொம்மை. சற்று நேரம் வைத்திருந்து விட்டு , பத்திரமாக உன்னிடமே திருப்பித் தந்து விடுகிறேன்."

இப்படி கனவு கண்டு கொண்டிருக்கும் போது , நிஜ உலகில் உடன் பிறப்புகளுக்கிடையே நடந்த சண்டையால் வந்த சத்தம் , என்னை நிஜ உலகுக்கு கொண்டு வந்தது.

Tuesday, August 18, 2009

புதுமை ஆடுகள் - (கற்பனை) - பகுதி - 2

(பகுதி 1 -க்குச் செல்ல )
ஒரு நாள் கந்தசாமியின் ஆடுகள் இரண்டு காணாமல் போய்விட்டது. அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்யும்படி சொன்னார். கந்தசாமி காவல் நிலையம் போவதற்கு முன்னாள் அவரது லேப்டாப்பை எடுத்து அதில் பதிவாகி இருந்த அவரது ஆடுகளின் விபரங்களை வேகமாகப் பார்த்தார். அவற்றில் இரண்டு புள்ளிகள் மட்டும்தனியாக நகர்ந்து செல்வது தெரிந்தது.

செயற்கைக் கோள் படங்கள் மூலம் அவை எங்கே நகர்ந்து செல்கின்றன என்று கவனித்தார். பக்கத்து ஊரிலிருக்கும் ஒரு இடத்தில் அந்த ஆடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஆடுகளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டதால் அவர் சில அவசர வேலைகளைச் செய்துவிட்டுப பிறகு காவல் நிலையம் சென்றார்.

அங்கே அவரது ஆடுகளைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார். அவரது லேப்டாப்பை காவலரிடம் காட்டினர். அப்போது இரண்டு புள்ளிகளில் ஒன்று வேகமாக நகர ஆரம்பித்து விட்டது. உடனே காவலரும், கந்தசாமியும் அந்த இடத்தை நோக்கி விரைந்தனர். முதலில் வேகமாக நகரும் புள்ளியை கண்டு பிடிக்கலாம் என்று என்று நினைதுஅது இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

அப்போது அந்தப் புள்ளி ஒரு இடத்தில் நின்றது.பிறகு மீண்டும் வேகமாகப் போக ஆரம்பித்தது. அந்தச் சமயம், அவர்கள் அந்தப் புள்ளி காட்டிய இடத்தின் அருகில் வந்து விட்டனர். அந்தப் புள்ளி அவர்களுக்கு முன்னாள் சென்ற ஒரு பேருந்தில் இருப்பதாக அவரது லேப்டோப் காட்டியது. பேருந்திற்கு முன்புறமாகச் சென்று அதை நிறுத்தும்படி செய்தனர். பேருந்திற்குள் எங்கும் ஆடு இல்லை. அந்தப் புள்ளி அங்கே அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டியது. குழப்பமடைந்து, அவரைக் கீழே இறங்கும்படிக் கூறினார் காவலர். அவரை விசாரித்ததும் அவர் ஆடு திருடியதை ஒப்புக் கொண்டார்.

இரண்டு ஆடுகளில் ஒன்று, அவரது வீட்டின் அருகில் இருப்பதாகவும், ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டு விட்டதாகவும் கூறினார். அவர் சாப்பிடும்போது சிறியதாக இருந்த சிப்பும் அவரது வயிற்ருக்குள் சென்று விட்டது. அதுவே அவர்கள் தேடிச் சென்ற புள்ளி.

இங்கே வேறு வலை மனைத் தொடர்பு :- (ஆங்கிலத்தில்)
'Tracking Chip' பற்றி மேலும் தெரிந்துகொள்ள - வலைமனைத் தொடர்பு.

Wednesday, August 12, 2009

வானில் மத்தாப்புப் பொறிகள்!

இரவு நேரத்தில் , பொழுது போகாமல் வானத்தைப் பார்த்துக் கொன்டிருந்தால், சில நட்சத்திரங்கள் விழுந்து மறைவதைப் பார்க்கலாம்.
எரி நட்சத்திரங்கள் என்று அழைக்கப் படும் இவை, உண்மையில் வானில் இருந்து விழும் கற்களே .

வானில் மிதக்கும் கற்கள் பூமியின் அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப் பட்டு, விரைந்து வருகின்றன. காற்று மண்டலத்தில் நுழையும் போது, காற்றின் உராய்வினால் அதிக வெப்பமடைந்து, பூமியைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகி மறைந்து போய்விடுகின்றன.

இப்போது பூமி, வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற பொருள்கள் நிறைந்த பகுதியில் செல்கிறது அதனால் இப்போது, சில நாட்களுக்கு எரிநட்சத்திரங்கள் அதிகமாகத் தெரியும்.

மேலும் தெரிந்து கொள்ள வேறு வலைமனைத் தொடர்பு.

Sunday, August 9, 2009

புதுமை ஆடுகள் - (கற்பனை)


அறிவியலில் பல புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதை அடிப்படையாக வைத்து , கற்பனையாக சில வற்றை இங்கே எழுதியிருக்கிறேன்.
-----------------------------------
கந்தசாமி அவர்கள் புதுப் புது செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அரைகுறையாகப் பயன்படுத்திவிட்டு பிறகு பயன்படுத்தலாம் என்று அவர் விட்டு வைத்திருக்கும் புதுமைப் பொருள்கள் ஒரு அறை முழுவதும் நிறைந்திருந்தன.

அவர் பல ஆடுகளை வளர்த்துக் கொண்டிருந்தார். புதுமையாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில், அவரது ஆடுகளின் உடலில் கண்காணிப்பு சிப்புகளை (அவை மிகவும் சிறியவை ) அதன் உடலுக்குள் பொருத்தி வைத்திருந்தார். அவரது லேப்டாப் மூலம் , அவரது ஆடுகள் எங்கே மேய்ந்து கொண்டிருக்கின்றன , அவை பத்திரமாக இருக்கிறதா என்பதையெல்லாம் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்.

ஒருநாள் தோட்ட வேலைகளை முடித்து விட்டு ,அசதி தீர வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தோட்டக்காரர் அவரை அழைப்பது கேட்டது. அவரது செடிகளை, கந்தசாமியின் ஆடுகள் மேய்ந்து விட்டதாகப் புகார் செய்தார். உடனே கந்தசாமி கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். வந்தவர், கந்தசாமி எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் செல்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தார். தனது செடிகளை அவரது ஆடு மேய்ந்து விட்டதால், தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க பணம் எடுக்கத்தான் உள்ளே போகிறாரோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

ஆனால் கந்தசாமி கையில் லேப்டாப்புடன் வெளியில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆட்டிற்கும் லேப்டாப்பி்ற்கும் என்ன தொடர்பு என்று குழம்பினார்.கந்தசாமி லேப்டாப்பை அவரிடம் காட்டினார்.அதில் அவருடைய நிலம், பக்கத்தில் இருந்த விலை நிலங்களின் படங்கள் தெரிந்தன. அதில் சிவப்பு வண்ணத்தில் பல புள்ளிகள் தெரிந்தன.

அவற்றில் சில புள்ளிகள் நகர்ந்து கொண்டும், சில நகராமலும் இருந்தன. "இதில் தெரியும் புள்ளிகள்தான் எனது ஆடுகள். இன்றைக்கு முழுவதும் எனது ஆடுகள் எங்கே சென்றன என்பது இதில் பதிவாகியுள்ளது. இப்போது அதை உங்களுக்கு போட்டுக் காட்டுகிறேன். " என்று சொல்லி அதைக் காட்டினார்.
புள்ளிகள் அனைத்தும் வேகமாக நகர ஆரம்பித்தன. ஆனால் அவை அவரது நிலத்தின் எல்லையைத் தாண்டவில்லை. அதைப் பார்த்து வாயடைத்துப் போன பக்கத்து வீட்டுக்காரர் பேசாமல் சென்றுவிட்டார்.

- மீதி பின்னர்...
------------------------------------------------------------------------------------------------------
இங்கே வேறு வலை மனைத் தொடர்பு :- (ஆங்கிலத்தில்)
'Tracking Chip' பற்றி மேலும் தெரிந்துகொள்ள - வலைமனைத் தொடர்பு.

Wednesday, August 5, 2009

வேகமான வளர்ச்சி !


நம்மைப் பற்றியும், நமது சூழ் நிலை பற்றியும் தெரிந்து கொள்ளப் பயன்படும் அறிவியல், கடந்த 200 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டும் இருக்கிறது.

அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையின் பல பகுதிகளிலும் - போக்குவரத்து, உடல்நலம், பொழுதுபோக்கு, அறிவை வளர்க்கும் வழிகள் என எல்லாப் பகுதிகளிலும் - நமக்குப் பயன்பட்டு வருகிறது.

அறிவியல் உண்மைகள் நடுநிலையாக உள்ளன.அவற்றை நாம் பயன்படுத்தும் விதமே, அது நமக்கு நன்மை மட்டும் தருகிறதா அல்லது கெடுதலும் கூடவே வருகிறதா என்பதை முடிவு செய்கிறது. நமக்குத் தேவையானவற்றை பெறும் வழிகளும் சரியாக இருந்துவிட்டால் அனைவருக்கும் அது நன்றாக இருக்கும். மோசமான குறுக்கு வழியில் வேகமாக போவதை விட, நன்றாக உள்ள பாதையில் சற்றே சுற்றி வளைத்துப் போவதே நல்லது.

அறிவியல் , தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் போதும் சரியான வழியில் செல்லவேண்டும். நீண்ட கால விளைவுகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மனிதனின் அடிப்படையான தன்மைகளில் ஒன்று, புதியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தேடலும், ஆர்வமும் ஆகும். சிறுவர்கள் புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை நாம் கவனித்திருப்போம். "ஏன்தான் இப்படிக் கேள்வியாகக் கேட்டுத் தொந்தரவு செய்கிறாய்?" என்று சொல்வதை விட்டு அவர்களுக்கும் கொஞ்ச நேரம் பொறுமையாக விளக்கம் தரலாம்.

நாம் வளர வளர நம் ஆர்வம் வளராமல் தேய்ந்து போகிறது. நமது தினசரி வாழ்க்கையின் பிரச்சினைகளில் சிக்கி நமது ஆர்வம் பலமில்லாமல் போய்விடுகிறது. சிலர் அந்த ஆர்வம் குறைந்து போகாமல் வளர்த்து வருகின்றனர்.

சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனை, கால இயந்திரம் மூலம் இப்போதைய உலகத்துக்கு கொண்டு வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அவருக்கு நாம் இப்போது சாதரணமாக நினைக்கும் தொலைக்காட்சி, செல்போன் , கம்ப்யூட்டர் , போக்குவரத்து சாதனங்கள் போன்றவை பிரமிப்பூட்டுவதாக இருக்கும்.

நாமும் இன்னும் இருநூரு , முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் சென்று பார்க்க முடிந்தால், நமக்கும் அதுபோல் பிரமிப்பு ஏற்படலாம். எதிர் காலத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.


சில அறிவியல் கற்பனை சார்ந்த திரைப்படங்களில் இருப்பது போல் இல்லாமல்,(மேட்ரிக்ஸ், டெர்மிநேட்டர், AI மற்றும் முன்பு வந்த அணுகுண்டுப் போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய படங்கள்) எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதே மற்றவர்களுக்கும் ,
எனக்கும் உள்ள நம்பிக்கை.

Saturday, August 1, 2009

எனது மனைவி எப்படி இருக்கக் கூடாது?

தன்மதிப் பார்வை அவளிடம் இல்லை, அவள்
கண்கள் கொண்டதோ கொடும்புலிப் பார்வை,
அவள் முகமும் காட்டிடும் கடுமையே என்றும்,
அதனின் வெப்பமும் சுட்டதே என்னை!

அமைதியும் இல்லையே அவள் மொழிதனிலே,
அதுவும் பெற்றது பெரும்புயலின் தன்மை,
அதிலும் ஆடியும் மனமும் வருந்திடும்,
அதனின் கடுமையில் எனதுடல் வேர்ததிடும்,

அறிவைப் பற்றியும் பேசியும் விட்டால் ,
அறிவின் மூலமே வளையுமோ உலகும்?
வெறும் காற்றில் இருந்தே பொருளும் தருமோ?
அறிவின் பெருமையை நானும் அறியேன்,

என்றே சொல்லியும் இருந்து விட்டால்,
எனது மனமும் துருவேறி விடுமே,
அன்புடன் அவளும் பேசிட மாட்டாள்,
மறந்தும் மற்றவரைப் புரிந்திட மாட்டாள்.

அடிமையாய் அவளும் இருக்கவும் மாட்டாள்,
அடிமையாய்ப் பார்ப்பாள் மற்றவர் தமையும்,
மற்றவர் உணர்வை மிதித்தே இருப்பாள்,
மறந்தும் மற்றவரைப் புரிந்திட மாட்டாள்.

இதையும் படித்துப் பாருங்கள்.

Wednesday, July 29, 2009

தேடல்

பலருக்கும் வாழ்கையில் பல விதமான தேடல்கள். யார் யார், எதை எதைத் தேடி வருகிறோம் என்பதை நினைவு படுத்திப் பார்க்கலாம்.

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு புத்தகங்களைத் தேடல்;
புத்தகத்தைக் கடன் கொடுத்தவர்களுக்கு , கடன் வாங்கியவர்களைத் தேடல்;
பழைய புத்தகம் வாங்குவோருக்கும் புத்தகத் தேடல்;
புத்தகம் சாப்பிடும் பூச்சிகளுக்கும் சாப்பிடப் புத்தகம் தேடல்;
கதைப் பிரியர்களுக்கு நல்ல கதைப் புத்தகங்களைத் தேடல்;

உணவு கிடைக்காதவர்களுக்கு உணவைத் தேடல்;
உணவுப் பிரியர்களுக்கு நல்ல உணவைத் தேடல்;
உடல் நலம் குறைந்து விட்டால் நலம் தரும் உணவைத் தேடல்;
மன மயக்கத்தில் இருப்பவர்களுக்கு தெளிவைத் தேடல்;
தெளிவாக இருப்பவர்களுக்கு (மது) மயக்கத்தைத் தேடல்;
சிலருக்கு புகையின் அளவைக் குறைத்து சூழ்நிலையை மாற்றும் வழிகளைத் தேடல்;
சிலருக்கு புகையை உடலுக்கு உள்ளே இழுக்கும் வழியைத் தேடல்;

படிக்கும்போது மதிப்பெண்களைத் தேடல்;
படித்து முடித்த பின் வேலை தேடல்;
பலருக்கும் பணத்தைத் தேடல்;
பணம் சேர்ந்த பிறகு எதை வாங்கலாம் என்ற தேடல்;
பிறகு நிம்மதியைத் தேடல்;

நோயுற்றபோது உடல்நலம் தேடல்;
உடல்நலம் இருக்கும்போது உடல் நலம் கெடும் வழிகளைத் தேடல்
(தவறான பழக்கங்கள் மூலம் )
அமைதியாக இருப்போர்க்குப் பரபரப்பைத் தேடல்;
பரபரப்பில் முழுகி அமைதியை இழந்தவர்களுக்கு அமைதியைத் தேடல்;
சிலருக்கு வலைமனைகளைத் தேடல்;
சிலருக்கு குழப்ப வலையிலிருந்து மீளும் வழிகளைத் தேடல்;

சிலருக்கு அன்பைத் தேடல்;
சிலருக்கு சண்டையைத் தேடல்;
சிலருக்கு நல்ல மனிதர்களைத் தேடல்;
சிலருக்கு நன்றாகப் பேசும் மனிதர்களைத் தேடல்;
சிலருக்கு நாம் யார் என்ற தேடல்;

இப்படி அனைவரும் பலவற்றையும் தேடித் தேடி அலைகிறோம். நாம் தேடுவது நல்ல தேடல்களாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Friday, July 24, 2009

எப்படி இருக்க வேண்டும் எனது மனைவி?

மானின் விழியே கொண்டவள் அவளும்,
தேனின் சுவையே கொண்டதே அவள்மொழி,
அவளது கன்னமும் அழகான ஆப்பிளே,
என்றே நானும் சொல்லிட மாட்டேன்.

நானும் சொல்வேன் என்துணை குணமும்,
நலமே சொல்வேன் என்னெதிர் பார்ப்பை,
அவளுடல் அழகில் சிலகுறை இருப்பினும்,
அவள்மன அழகில் உயர்வே வேண்டும்.

அவள்பார்வையும் கொண்டதே அன்பின் மொழி,
சொல்தனும் தந்திடும் அமைதியும் எனக்கே,
அவள் மனதின் அழகே பேரழகே,
அதனையும் கண்டு மகிழ்ந்திருப்பேனே.

உலகஅறிவும் பெற்றிடவேண்டும்,அதன்
உயர்வும் நாமும் அறிந்திட வேண்டும்,
சிந்தனை உயர்வே நமக்கு வேண்டும்,
என்றே அவளும் இருந்திடுவாளே.

அடிமையாய் அவளும் இருக்கவும் வேண்டாம்,
அரும் நண்பனாய் அவளும் இருக்கவும் வேண்டும்,
எனது மனதினைப் புரிந்திட வேண்டும்,
எனது உணர்வினை மதித்திட வேண்டும்.

என்னுடன் விவாதப் போரும் இடாமல்,
ஏற்றமும் தந்திடும் உரையும் வேண்டும்,
நறுமணம் கமழ்ந்திடும் சோலையும் அவளே,
அதன் மனம் பரவிடும் என்மனம் தனிலே,

துயரம் வரும்தனில் இருப்பாள் இரும்பாய் ,
அவள் மன வலிவும் என்வலி போக்கிடும்,
இவள்தான் எனது கனவுக் கன்னி,
இவள்தன் இப்படி இல்லை எனினும்,
அன்பின் துணையுடன் அறிவின் துணையுடன் ,
அவளையும் நானும் மாற்றிட முயல்வேன்!