Wednesday, July 29, 2009

தேடல்

பலருக்கும் வாழ்கையில் பல விதமான தேடல்கள். யார் யார், எதை எதைத் தேடி வருகிறோம் என்பதை நினைவு படுத்திப் பார்க்கலாம்.

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு புத்தகங்களைத் தேடல்;
புத்தகத்தைக் கடன் கொடுத்தவர்களுக்கு , கடன் வாங்கியவர்களைத் தேடல்;
பழைய புத்தகம் வாங்குவோருக்கும் புத்தகத் தேடல்;
புத்தகம் சாப்பிடும் பூச்சிகளுக்கும் சாப்பிடப் புத்தகம் தேடல்;
கதைப் பிரியர்களுக்கு நல்ல கதைப் புத்தகங்களைத் தேடல்;

உணவு கிடைக்காதவர்களுக்கு உணவைத் தேடல்;
உணவுப் பிரியர்களுக்கு நல்ல உணவைத் தேடல்;
உடல் நலம் குறைந்து விட்டால் நலம் தரும் உணவைத் தேடல்;
மன மயக்கத்தில் இருப்பவர்களுக்கு தெளிவைத் தேடல்;
தெளிவாக இருப்பவர்களுக்கு (மது) மயக்கத்தைத் தேடல்;
சிலருக்கு புகையின் அளவைக் குறைத்து சூழ்நிலையை மாற்றும் வழிகளைத் தேடல்;
சிலருக்கு புகையை உடலுக்கு உள்ளே இழுக்கும் வழியைத் தேடல்;

படிக்கும்போது மதிப்பெண்களைத் தேடல்;
படித்து முடித்த பின் வேலை தேடல்;
பலருக்கும் பணத்தைத் தேடல்;
பணம் சேர்ந்த பிறகு எதை வாங்கலாம் என்ற தேடல்;
பிறகு நிம்மதியைத் தேடல்;

நோயுற்றபோது உடல்நலம் தேடல்;
உடல்நலம் இருக்கும்போது உடல் நலம் கெடும் வழிகளைத் தேடல்
(தவறான பழக்கங்கள் மூலம் )
அமைதியாக இருப்போர்க்குப் பரபரப்பைத் தேடல்;
பரபரப்பில் முழுகி அமைதியை இழந்தவர்களுக்கு அமைதியைத் தேடல்;
சிலருக்கு வலைமனைகளைத் தேடல்;
சிலருக்கு குழப்ப வலையிலிருந்து மீளும் வழிகளைத் தேடல்;

சிலருக்கு அன்பைத் தேடல்;
சிலருக்கு சண்டையைத் தேடல்;
சிலருக்கு நல்ல மனிதர்களைத் தேடல்;
சிலருக்கு நன்றாகப் பேசும் மனிதர்களைத் தேடல்;
சிலருக்கு நாம் யார் என்ற தேடல்;

இப்படி அனைவரும் பலவற்றையும் தேடித் தேடி அலைகிறோம். நாம் தேடுவது நல்ல தேடல்களாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Friday, July 24, 2009

எப்படி இருக்க வேண்டும் எனது மனைவி?













மானின் விழியே கொண்டவள் அவளும்,
தேனின் சுவையே கொண்டதே அவள்மொழி,
அவளது கன்னமும் அழகான ஆப்பிளே,
என்றே நானும் சொல்லிட மாட்டேன்.

நானும் சொல்வேன் என்துணை குணமும்,
நலமே சொல்வேன் என்னெதிர் பார்ப்பை,
அவளுடல் அழகில் சிலகுறை இருப்பினும்,
அவள்மன அழகில் உயர்வே வேண்டும்.

அவள்பார்வையும் கொண்டதே அன்பின் மொழி,
சொல்தனும் தந்திடும் அமைதியும் எனக்கே,
அவள் மனதின் அழகே பேரழகே,
அதனையும் கண்டு மகிழ்ந்திருப்பேனே.

உலகஅறிவும் பெற்றிடவேண்டும்,அதன்
உயர்வும் நாமும் அறிந்திட வேண்டும்,
சிந்தனை உயர்வே நமக்கு வேண்டும்,
என்றே அவளும் இருந்திடுவாளே.

அடிமையாய் அவளும் இருக்கவும் வேண்டாம்,
அரும் நண்பனாய் அவளும் இருக்கவும் வேண்டும்,
எனது மனதினைப் புரிந்திட வேண்டும்,
எனது உணர்வினை மதித்திட வேண்டும்.

என்னுடன் விவாதப் போரும் இடாமல்,
ஏற்றமும் தந்திடும் உரையும் வேண்டும்,
நறுமணம் கமழ்ந்திடும் சோலையும் அவளே,
அதன் மனம் பரவிடும் என்மனம் தனிலே,

துயரம் வரும்தனில் இருப்பாள் இரும்பாய் ,
அவள் மன வலிவும் என்வலி போக்கிடும்,
இவள்தான் எனது கனவுக் கன்னி,
இவள்தன் இப்படி இல்லை எனினும்,
அன்பின் துணையுடன் அறிவின் துணையுடன் ,
அவளையும் நானும் மாற்றிட முயல்வேன்!

வளரும் மனம்

நீண்ட காலத்திற்குப் பிறகு, மனித வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அறிவியல், தொழில் துறை ,புத்தகங்கள் போன்றவை கடந்த இருநூறு ஆண்டுகளில் மிகவும் வளர்ந்துள்ளன. ஆனால் நாம் அவற்றை தேவையான அளவு பயன்படுத்துகிறோமா?

முன் இருந்த காலகட்டத்தை விட இப்போது நாம் பல துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தொலைக்காட்சி, புத்தகங்கள், இன்டர்நெட், வானொலி போன்றவை பல தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவுகின்றன. ஆனால் நமது மனம் அவற்றை நாடினால் மட்டுமே அவற்றின் பயன் நமக்கு கிடைக்கும்.

நாம் நமது வேலை சார்ந்த துறைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். அது கட்டாயத்தினால் ஏற்படுவது. நமது ஆர்வம் காரணமாக சிலவற்றை படிக்கிறோம்.

ஆனால் நமக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த நமது முயற்சியும் தேவை. நமக்கு கிடைக்கும் எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொள்வது முடியாத காரியம். அது தேவையும் இல்லை. ஆனால் பரவலான முறையில் பல செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். அறிவியல், உடல் நலம், தத்துவம், மனதை முன்னேற்றும் வழிகள் என பல துறைகளைப் பற்றி அறிவைச் சேர்க்கலாம். இவை நமது வாழ்கையில் உதவியாகவும், நமது மனதைப் பரந்ததாக மாற்றவும் பயன்படும். அறிவு என்னும் பூச்செடிகளை வளர்த்து நமது மனம் என்னும் தோட்டத்தை வளப்படுத்தலாம்.

"எனக்குக் கதைப் புத்தகந்தான் உயிர்!"
"எனக்கு அறிவியல்தான் இன்ரஸ்ட்!" - என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். இவற்றோடு மற்றதற்கும் சற்று நேரம் ஒதுக்கலாம்.

பணம் சேர்க்க கடுமையாக முயற்சி செய்வதைப் போலவே நமது மனதுக்கும் மணம் சேர்க்கும் முயற்சியிலும் நாம் சற்று இறங்கலாம்.