Wednesday, August 5, 2009

வேகமான வளர்ச்சி !


நம்மைப் பற்றியும், நமது சூழ் நிலை பற்றியும் தெரிந்து கொள்ளப் பயன்படும் அறிவியல், கடந்த 200 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டும் இருக்கிறது.

அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையின் பல பகுதிகளிலும் - போக்குவரத்து, உடல்நலம், பொழுதுபோக்கு, அறிவை வளர்க்கும் வழிகள் என எல்லாப் பகுதிகளிலும் - நமக்குப் பயன்பட்டு வருகிறது.

அறிவியல் உண்மைகள் நடுநிலையாக உள்ளன.அவற்றை நாம் பயன்படுத்தும் விதமே, அது நமக்கு நன்மை மட்டும் தருகிறதா அல்லது கெடுதலும் கூடவே வருகிறதா என்பதை முடிவு செய்கிறது. நமக்குத் தேவையானவற்றை பெறும் வழிகளும் சரியாக இருந்துவிட்டால் அனைவருக்கும் அது நன்றாக இருக்கும். மோசமான குறுக்கு வழியில் வேகமாக போவதை விட, நன்றாக உள்ள பாதையில் சற்றே சுற்றி வளைத்துப் போவதே நல்லது.

அறிவியல் , தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் போதும் சரியான வழியில் செல்லவேண்டும். நீண்ட கால விளைவுகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மனிதனின் அடிப்படையான தன்மைகளில் ஒன்று, புதியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தேடலும், ஆர்வமும் ஆகும். சிறுவர்கள் புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை நாம் கவனித்திருப்போம். "ஏன்தான் இப்படிக் கேள்வியாகக் கேட்டுத் தொந்தரவு செய்கிறாய்?" என்று சொல்வதை விட்டு அவர்களுக்கும் கொஞ்ச நேரம் பொறுமையாக விளக்கம் தரலாம்.

நாம் வளர வளர நம் ஆர்வம் வளராமல் தேய்ந்து போகிறது. நமது தினசரி வாழ்க்கையின் பிரச்சினைகளில் சிக்கி நமது ஆர்வம் பலமில்லாமல் போய்விடுகிறது. சிலர் அந்த ஆர்வம் குறைந்து போகாமல் வளர்த்து வருகின்றனர்.

சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனை, கால இயந்திரம் மூலம் இப்போதைய உலகத்துக்கு கொண்டு வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அவருக்கு நாம் இப்போது சாதரணமாக நினைக்கும் தொலைக்காட்சி, செல்போன் , கம்ப்யூட்டர் , போக்குவரத்து சாதனங்கள் போன்றவை பிரமிப்பூட்டுவதாக இருக்கும்.

நாமும் இன்னும் இருநூரு , முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் சென்று பார்க்க முடிந்தால், நமக்கும் அதுபோல் பிரமிப்பு ஏற்படலாம். எதிர் காலத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.


சில அறிவியல் கற்பனை சார்ந்த திரைப்படங்களில் இருப்பது போல் இல்லாமல்,(மேட்ரிக்ஸ், டெர்மிநேட்டர், AI மற்றும் முன்பு வந்த அணுகுண்டுப் போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய படங்கள்) எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதே மற்றவர்களுக்கும் ,
எனக்கும் உள்ள நம்பிக்கை.

2 comments:

KParthasarathi said...

எதிர்காலம் நன்றாக இருக்கும் என்கிற உங்கள் நம்பிக்கை த்ருப்தியாக உள்ளது.இருந்தாலும் கலாசார
சீரழிவு சற்று கவலையை தருகிறது.
உங்கள் ப்ளாக் நன்றாக உள்ளது

Ezhilan said...

KParthasarathi
அவர்களுக்கு நன்றி. கலாச்சாரமும் கவனிக்கப்படவேண்டும்.